Type Here to Get Search Results !

அக்பர் பீர்பால் கதைகள் நடுங்கும் குளிரில் நீருக்குள்

அக்பர் பீர்பால் கதைகள் - நடுங்கும் குளிரில் நீருக்குள்

 இரவுபொழுது ஒன்றில் அக்பரும் பீர்பாலும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்தபடியால் சால்வையை இருக்கமாக போர்த்திக் கொண்டிருந்தார், அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டி எடுத்தது. "பீர்பால்" இந்த குளிரின் கொடுமை பார்த்தீரா.

எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்து இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்தக் குளிரை பொருட்படுத்தாமல், யமுனை நதியில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் நிற்க வேண்டும். அப்படி யார் நிற்கிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கலாம் என்றார் அக்பர்.

akbar birbal stories in tamil
Akbar Birbal Story in Tamil


அரசே சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்து விடலாம்,ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவதும் யமுனை ஆற்றில் நிற்பது என்பது முடியக் கூடிய காரியமா? என்றார் பீர்பால்.

யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை என உறுதி இருந்தால் போதும்! நாடெங்கும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெறுவார்கள். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்? என்றார் அக்பர்.

அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது, அடுத்தநாளே ஒரு இளைஞன் அரசரைப் பார்க்க வந்தான். அரசே யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றான். அக்பர் அந்த இளைஞனை வியப்பாகப் பார்த்தார். 

நடுங்கும் குளிரில் நிற்பது சாதாரண காரியம் இல்லையே என்று நினைத்து அக்பர், அந்த இளைஞன் யமுனை நதியில் நிற்பதை கண்காணிக்குமாறு இரண்டு காவலர்களை அனுப்பி வைத்தார்.

யமுனை நதியில் வெற்று உடம்புடன் இறங்கினான். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடம்பு நடுங்கியது குளிரில் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பரிசாக கிடைக்கப்போகும் ஒரு லட்சம் நாணயத்தை நினைத்துக்கொண்டான்.உடலில் புது தெம்பு ஏற்படவே, இரவெல்லாம் கண்விழித்தபடியே நின்று கொண்டிருந்தான்.

பொழுது புலர்ந்தது வெயில் மேனியில் பட்டதும் உடல் சீரான நிலைக்கு வந்தது. ஒரு லட்சம் நாணயத்தை அரசரிடம் பெறப் போகிறோம் என்று உற்சாகத்தோடு யமுனை நதியை விட்டு மேலே ஏறினான் அந்த இளைஞன். அவனை கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளிகள் அரசரிடம் சென்று அந்த இளைஞன் இரவு முழுவதும் யமுனை நதிக்குள் இருந்ததை கூறினார்கள். 

அக்பருக்கு வியப்பாக இருந்தது !இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில் நீருக்குள் நிற்கும்போது, உனக்கு எந்த வகையிலும் ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய், அரசே அரண்மனையின் மேல்மாடத்தில் சிறிய விளக்கின் ஒளியைப் பார்த்துக்கொண்டே இரவு பொழுதை கழித்தேன் என்றான். இளைஞனே அதானே பார்த்தேன் நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் நிற்பதற்கு உனக்கு எப்படி முடிந்தது என்று இப்போதுதான் புரிகிறது, உனது குளிரைப் போக்க அரண்மனையிலிருந்து வீசிய ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவதும் நீ நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஒரு லட்சம் நாணயங்களை தர இயலாது என்று கூறி விட்டார்.

அன்பளிப்பு கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் ஏமாற்றத்துடன் திரும்பிப் போனான். நடந்த விபரங்களை பீர்பாலிடம் கூறினான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை வாங்கித் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு அக்பர் வேட்டையாட புறப்பட்டுக் கொண்டிருந்தார். பீர்பாலையும் தம்முடன் அழைத்துச் செல்ல எண்ணிய அக்பர் காவலாளியைக் கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார். பீர்பால் தன்னைத் தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் செய்து கொண்டிருப்பதையும், சாப்பிட்டுவிட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக காத்திருந்தார் அரசர்.

பீர்பால் வந்து சேரவில்லை, மிகவும் கோபமடைந்த அக்பர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. இதைக் கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார்.

பீர்பால், தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?என்றார். அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பீர்பால்.

உமக்கு என்ன மூளை குழம்பி போய் விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது, அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகப்போகிறது? என்றார் கோபத்துடன்,

அரசே நிச்சயம் சோறு வேகும், யமுனை நதியில் தண்ணீருக்குள் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த வெளிச்சம் சூட்டைத் தந்திருருக்கும் போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டு சோறு வெந்துவிடாமல் போகுமா என்ன? என்றார் பீர்பால். மிகவும் நாசூக்காக தமக்கு புரியவைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனுக்கு முன்பு கூறியபடியே பரிசினை வழங்கினார் அக்பர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies